35 ஆண்டுகளில் செய்யாததை நான் செய்துள்ளேன்...! பட்டியலிட்ட ஆந்திர அமைச்சர் ரோஜா...!

ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, நியூஸ் 18 தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.


அப்போது, “எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு வளர்ச்சி ஆந்திர மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளது. கல்வி மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தனியார் பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் விஞ்சும் அளவிற்கு கட்டமைப்புகள் மாற்றப்பட்டுள்ளன

தனியார் பள்ளிக்கூடங்களை விட அரசு பள்ளிக்கூடங்களில் தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்துள்ளது. அரசு மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் எந்த கட்சி சார்பில் இல்லாமல் அனைத்து மக்களையும் சென்று சேரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான விளையாட்டு ஊக்குவிப்பு திட்டங்கள் என அனைத்து துறையிலும் வளர்ச்சி கண்டுள்ளது ஆந்திரா. கொரோனா காலங்களில் மக்களுக்கு தரமான சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கப்பட்டது.

5 ஆண்டுகளில் சிறந்த ஆட்சி தந்ததால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் யாருக்கு எல்லாம் எம்பி, எம்எல்ஏ சீட் வந்துச்சோ அவங்க எல்லாம் லக்கி, ஈஸியா ஜெயிச்சிடலாம்.

24 மணி நேரமும் என்னை மக்கள் எளிதில் சந்திக்ககூடிய அமைச்சராக இருந்துள்ளேன்.  எனது தொகுதியில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்துள்ளேன். சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் உண்மையான வளர்ச்சி முகம் என்று பிரச்சாரம் செய்யப்படுவது முற்றிலும் தவறு. அப்படி என்றால் சந்திரபாபு நாயுடுவின் மகன் ஏன் தேர்தலில் தோல்வியடைய வேண்டும். சந்திரபாபு நாயுடு குடும்ப ஆட்சியில் அவர்கள், தங்களை  மட்டுமே வளர்த்துக்கொண்டனர். " இவ்வாறு அவர் கூறினார்.