பழங்குடி மாணவர்களுக்கு ரூ.25,000 ஆராய்ச்சி உதவித்தொகை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, பழங்குடியினர் சமூகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் வாழ்வியலைப் பற்றிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் "தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தை" அறிமுகப்படுத்தியுள்ளது. 

சமூக அறிவியல், வரலாறு, மனிதவியல், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பழங்குடியினரை மையப்படுத்தி ஆய்வு செய்யும் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் மற்றும் மேலாய்வாளர் நிலை மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் நிதி ஆதரவு வழங்கப்படவுள்ளது. 

2024–2025 கல்வியாண்டை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், தகுதிப் பிரிவின்படி, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 வீதம் ஆறு மாதங்கள் வரையிலும், முனைவர் பட்டம் மற்றும் மேலாய்வாளர் நிலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 வீதம் மூன்று ஆண்டுகள் வரையிலும் உதவித்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டைச் சேர்ந்த, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்குள் இருக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், பழங்குடியினர் வாழ்க்கையின் மையத்திலிருந்து எழும் பிரச்சினைகள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அறிவு முறைகளை புதிய கோணத்தில் பொதுச் சமூகத்திற்குக் கொண்டு வந்து, கல்வியியல் தளத்தில் அவர்களின் பங்களிப்புகளை முக்கிய இடத்தைப் பெறச் செய்வதாகும். 

இத்திட்டத்தை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒருங்கிணைக்கிறது. ஆராய்ச்சி முன்மொழிவின் தரம், பொருத்தம் மற்றும் சமூகப் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்கள் fellowship.tntwd.org.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி டிசம்பர் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இந்த உதவித்தொகைத் திட்டம், நாட்டின் பண்பாட்டுப் பன்மையைப் புரிந்துகொள்வதற்கும், சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் அடித்தளமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை

தகுதி : 

இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்திற்குள் இருப்பதும் அவசியம் ஆகும் .

தேர்வுச் செயல்முறை : 

ஆராய்ச்சி முன்மொழிவின் தரம் மற்றும் அது சமுதாயத்திற்கு எந்த அளவு பயன்படும்  பொருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செயல்முறை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 

ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க டிசம்பர் 12 கடைசித் தேதியாகும்.