மருத்துவத் துறையில் இவ்வளவு படிப்புகளா...?
மருத்துவம் படிக்க வேண்டும் என்கிற ஆசையில் மாணவர்கள் 12ஆம் வகுப்பில் தீவிரமாகப் படித்து நுழைவுத் தேர்வுகளை எழுதி சீட் பெற்றுப் படிக்கின்றனர். ஆனால் படித்து முடித்த அனைவருக்கும் அதற்கேற்ற வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான்.

பெருவாரியான மாணவர்கள் ஒரே பிரிவைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது அந்த பிரிவில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதை கடினமாக்குகிறது. மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம் பெரும்பாலோனோருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் மருத்துவத்துறையில் மேலும் பல படிப்புகள் உள்ளன.
எம்.பி.பி.எஸ்: ஐந்தரை ஆண்டு படிப்பான இதைப் படித்து முடித்து, மருத்துவப் பயிற்சியை முடித்த பிறகு, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்த பிறகே மருத்துவராகப் பணிபுரிய முடியும். எம்.பி.பி.எஸ். படித்த மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வில் தேர்ச்சிபெற்று அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் மருத்துவராகலாம்.
அதேபோல, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையிலும் அரசு வேலைவாய்ப்பைப் பெற முடியும். இதுதவிர மத்திய அரசுத் தேர்வாணையம் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்காகச் சிறப்புத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பாதுகாப்புத் துறை, ரயில்வே துறைகளில் மருத்துவராகப் பணிபுரிய முடியும். இதுதவிர சொந்தமாக மருத்துவமனை வைத்தும் நடத்தலாம். இதுதவிர, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
பிடிஎஸ்: பயிற்சிக் காலத்துடன் சேர்த்து மொத்தம் 5 ஆண்டு படிப்பான இதைப் படிப்பதன் மூலம் பல் மருத்துவச் சிகிச்சை மட்டுமல்லாமல், பல்லை அழகுபடுத்துதல் போன்ற பணிகளுக்கும் பல் மருத்துவரின் தேவை இருக்கிறது. பிடிஎஸ் படித்து முடித்த பின் பல் மருத்துவக் கவுன்சிலில் பல் மருத்துவராகப் பதிவுசெய்ய வேண்டும். பல் மருத்துவம் படித்தவர்கள் மருத்துவமனைகளில் வேலைக்குச் செல்வதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட கால அனுபவத்திற்குப் பிறகு சொந்தமாகப் பல் மருத்துவமனை வைத்து நடத்தலாம்.
மேலும், பல் மருத்துவத்திற்குத் தேவையான பொருட்களைத் தயார் செய்யும் நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் பணிகளில் சேர முடியும். பாராடெண்ட்டல் மெடிக்கல், டெண்ட்டல் மெட்டீரியல் அண்ட் ஓரல் ஹைஜீன், டெண்ட்டல் டெக்னீசியன் போன்ற பல்வேறு பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளிலும் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் சேரலாம்.
நர்சிங்: மருத்துவப் பணியைப் போலவே செவிலியர் பணிக்கும் தற்போது, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவையும் வேலைவாய்ப்பும் அதிகம் உள்ளது. நர்ஸிங் பணியைப் பொறுத்த வரை 12ஆம் வகுப்பு முடித்த பிறகு ஜெனரல் நர்ஸிங் அண்ட் மிட் வைப்ரி என்ற மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பையும், பி.எஸ்சி. 4 ஆண்டு பட்டப் படிப்பையும் படிக்கலாம்.
பார்மஸி: ஒரு மருந்தின் தன்மை, பண்புகள், பக்கவிளைவுகள் குறித்து அறிவதே பி.பார்ம்., என்கிற பார்மஸி படிப்பு. இதைப் படித்தவர்களுக்கு மருத்துவமனை, ஆராய்ச்சிக் கூடங்கள், மருந்து உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், தமிழ்நாட்டில் சொந்தமாக மெடிக்கல் வைக்க விரும்புவோர் கண்டிப்பாக பார்மஸி படித்திருக்க வேண்டும். இதுதவிர தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநராகப் பணியாற்ற முடியும்.
சித்த மருத்துவம்: மிகப் பழமையான பாரம்பரியமான வைத்திய முறை இது. இது முற்றிலும் இயற்கை வைத்திய முறை என்பதோடு மட்டுமல்லாமல், மனதிற்கும், உடலுக்கும் நலம் பயக்கும் மருத்துவ முறை என்பதால், மக்களிடையே தற்போது இந்த மருத்துவத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணிபுரியலாம். தனியாகச் சித்த மருத்துவமனை தொடங்கலாம். இதுதவிர சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கூடங்களில் பணிபுரியலாம். இதுதவிர சித்த மருந்துத் தயாரிப்பிலும் ஈடுபடலாம்.
ஆயுர்வேதம்: ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். பி.ஏ.எம்.எஸ்., என்னும் 5 ஆண்டுக்கால ஆயுர்வேத மருத்துவப் பட்டப் படிப்பில் மாணவர்கள் சேரலாம். பி.எஸ்.எம்.எஸ். என்ற ஐந்தாண்டு இளநிலைப் பட்ட ஆயுர்வேத மருத்துவப் படிப்பிலும் சேரலாம் .டிப்ளமோ இன் ஆயுர்வேதிக் பார்மஸி என்ற 2 ஆண்டு ஆயுர்வேத டிப்ளமோ படிப்பிலும் சேரலாம்.
ஹோமியோபதி: மிக எளிய முறையிலான சிகிச்சை முறையும் பக்கவிளைவுகள் இல்லாத மருந்துகளைக் கொண்டது என்பதாலும் ஹோமியோபதி மருத்துவம் மக்களிடம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஹோமியோபதி மருத்துவப் படிப்பான பி.எச்.எம்.எஸ். ஐந்தரை ஆண்டு படிப்பு (ஓர் ஆண்டுஇன்டர்ன்ஷிப்) ஆகும். ஹோமியோபதி மருத்துவத்தில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணவர்கள், மருத்துவமனை, ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவக் கல்லூரிகள், மருத்துவப் பயிற்சி மையங்களில் பணிபுரிய முடியும். இதுதவிர சொந்தமாக ஹோமியோபதி மருத்துவராகப் பணியாற்ற முடியும்.
கால்நடை மருத்துவப் படிப்புகள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பி.வி.எஸ்சி. அண்ட் ஏ.ஹெச். படிப்புகளில் சேரலாம். இது 5 ஆண்டு படிப்புடன் 6 மாதப் பயிற்சியும் கொண்டதாகும். 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களை எடுத்துப் படித்தவர்கள் கால்நடை மருத்துவப் படிப்பில் சேரலாம். உயிரியல் பாடத்துடன் கோழி வளர்ப்பு அல்லது பால்வளம் ஆகிய தொழில் பாடப்பிரிவுகளை (வொகேஷனல்) எடுத்துப் படித்தவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்பில் அகில இந்திய அளவில் உள்ள இடங்களில் சேருவதற்கு நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். இப்படிப்பை முடித்தவர்கள், கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவராகப் பணி புரியலாம். கால்நடைப் பண்ணைகள், கோழிப் பண்ணைகளிலும் கால்நடைத் தீவனங்கள் தயாரிப்பு நிலையங்களிலும் பால் உற்பத்தி நிலையங்களிலும் கால்நடை மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணிகளுக்கும் செல்லலாம்.