முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... தேனி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வரும் மே 7 முதல் 14 ஆம் தேதி வரை இரவு பகலாக கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.


மேலும் தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து வீரபாண்டி வழியாக சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர், குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் போடந்திரபுரம் பிரிவில் இருந்து உப்புக்கோட்டை, குச்சனூர், மார்க்கேயன்கோட்டை வழியாக செல்ல வேண்டும்.
அதே போல எதிர் மார்க்கத்தில் இருந்து தேனி வரும் வாகனங்கள் உப்பார்பட்டி பிரிவிலிருந்து தப்புக்குன்டு, தாடிச்சேரி, கொடுவிலார்பட்டி வழியாக செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.