தேனி மக்களை குளிர்வித்த கோடை மழை... சாலைகளில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்...

கம்பம் சுற்று வட்டார பகுதியில் ஒரு மணி நேரமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தேனி மாவட்டம் கம்பம் அதன் சுற்றுப்புற பகுதிகளான கூடலூர், லோயர் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசி கனமழை பெய்தது, இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் வெயில் தாக்கத்தால் நீர்நிலைகளில் தண்ணீர் முற்றிலுமாக வற்றி வறண்டு காணப்பட்டது.


பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் கம்பம், கூடலூர்,லோயர் கேம்ப் பகுதிகளில் வானில் கரு மேகங்கள் கூடி இடி மின்னலுடன் பலத்த சூறைக்காற்று வீசி கனமழை பெய்ததால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசத் தொடங்கியது. ஒரு மணி நேரம் மழை தொடர்ந்து பெய்ததால் நீர் நிலைகளில் தண்ணீர் பெருகியதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அக்னி நட்சத்திர கால துவக்கத்தின் மழை பெய்ய துவங்கியதால் சுட்டெரிக்கும் சூரியனை சமாளிக்க முடியாமல் தவித்த மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.