ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது

பிரபல சுற்றுலா தலமான ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வோரின் வருகையை முறைப்படுத்தும் நோக்கில், சுற்றுலா பயணிகளின் விவரங்கள், வாகன எண், தங்குமிடம் உள்ளிட்டவற்றை அடையாளப்படுத்தி இ பாஸ் நடைமுறையை கொண்டு வர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


அதன்படி, தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இ-பாஸ் விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், உள்நாட்டு பயணிகள், தங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி இ-பாஸ் பெறலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதே போன்று, வெளிநாட்டு பயணியர் தங்கள் மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணியருக்கோ, வணிக ரீதியாக வந்து செல்வோருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.


மேலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள், இ-பாஸ் விண்ணப்பிக்க தெரியாதவர்களுக்கு தாங்கள் உதவி செய்யத் தயாராக இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று உதகைக்கு சுற்றுலா செல்ல இரண்டு லட்சத்து 78 ஆயிரம் பேர் இ-பாஸ் பெற்றுள்ளனர். 21 ஆயிரத்து 446 வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் நடைமுறை இன்று தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.