கேரி பேக்குகள் தயாரிப்பில் வித்தியாசமாக அசத்தும் பெண் தொழிலதிபர்!

இன்று வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக இருக்கும் அனைவரிடமும் ஆர்வம், வளர்ச்சி, எதையும் கற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், மன உறுதி போன்ற திறன்கள் நீக்கமற நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி தங்களது புதுமையான யோசனைகளை எப்படி வெற்றிகரமான தொழிலாக மாற்ற முடியும் என்ற திறமையும் அவர்களிடம் நிறையவே இருக்கும். அப்படியொரு பெண் தொழில்முனைவோரைப் பற்றிதான் இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

சட்டீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரைச் சேர்ந்த சோனல் அகர்வால், கழிவு மற்றும் குப்பை பொருட்களிலிருந்து பயனுள்ள கேரி பேக்குகளை தயாரித்து வருகிறார். இந்த தொழிலை தொடங்கிய புதிதில் பல சிரமங்களை சந்தித்த போதிலும் மன உறுதியோடு போராடி சிறிய அளவில் தன்னுடைய தொழிற்சாலையை தொடங்கினார் சோனல் அகர்வால்.

ஆரம்பத்தில் பழைய சேலைகளையும், துணிகளையும் துப்பட்டாவையும் பயன்படுத்தி பைகளை தயாரித்து வந்த சோனல், அதனை அருகிலுள்ள சந்தைகளில் விற்பனை செய்து வந்தார். தன்னுடைய தொழிலை விரிவுபடுத்த பல நகரங்களில் நடைபெற்ற கண்காட்சிகளில் கலந்துகொண்டார். அப்போதுதான் தன்னைப்போல் பலரும் கழிவு பொருட்களிலிருந்து பைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருவதை தெரிந்துகொண்டார் சோனல்.

இவர்களிடமிருந்து தனித்து தெரிய வேண்டுமென்றால் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என முடிவு செய்த சோனல், தன்னுடைய தொழிலை சற்று மாற்றி கேரி பேக்குகளை தயாரிக்கத் தொடங்கினார். இதில் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

கழிவுப்பொருட்களிலிருந்து பைகளை தயாரித்தபோது வெற்றி பெற முடியாத சோனல், கேரி பேக் தயாரித்து விற்பனை செய்த போது அவருக்கு வெற்றியும் நல்ல லாபமும் கிடைத்தது. இவர் தயாரிக்கும் கேரி பேக்குகள் இன்று பல நகரங்களில் உள்ள மால்கள், கடைகள், சந்தைகளில் விற்கப்படுகின்றன.

இவருடைய ஆலையிலிருந்து ஒவ்வொரு மாதமும் 20,000-க்கும் மேற்பட்ட கேரி பேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இவர்களுடைய வருமானமும் தற்போது அதிகரித்துள்ளது. கடைகளுக்கு மொத்தமாக விற்கப்படும் இந்த பைகள் ஒவ்வொன்றும் தோராயமாக ரூ.100 முதல் பல ஆயிரங்கள் என்ற விலையில் விற்கப்படுகின்றன.

பெண்கள் சுயமாக சம்பாதித்தால் அவர்கள் யாரை நம்பியும் வாழ வேண்டிய அவசியம் ஏற்படாது. அப்படியான பெண்களை உருவாக்கவே சோனலும் விரும்புகிறார்.