Fake Ads : வெளிநாட்டு வேலை வாய்ப்பு - போலி விளம்பரங்கள் குறித்து நாமக்கல் கலெக்டர் கொடுத்த அலர்ட்...
நாமக்கல், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த போலியான விளம்பரங்களில் இளைஞர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி படித்த இளைஞர்களை சோசியல் மீடியாக்கள் மூலமாக மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மார் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், (Digital Sales and Marketing Executive), (Data Entry Operator) வேலை உள்ளது.
அதிக சம்பளம் கிடைக்கும் என்ற பெயரில் ஏமாற்றி, சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று அவர்களை கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வருகின்றன.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இளைஞர்கள், அரசினால் பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகள் மூலம் மட்டுமே வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும். அவ்வாறான பணிகள் குறித்த விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது சென்னை குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் அல்லது சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் வெப்சைட்டில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படி செயல்பட வேண்டும்.
அரசினால் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் குறித்த விபரங்களை www.emigrate.gov.in என்ற வெப்சைட்டில் அறிந்து கொள்ளலாம். மேலும், சென்னை குடிபெயர்வு அலுவலக உதவி எண்.90421 49222 மூலமாகவும், poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற இமெயில் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம்.