SBI JA 2024 : எஸ்.பி.ஐ வங்கியில் 13735 ஜூனியர் அசோசியட்ஸ் காலி பணியிடங்கள் அறிவிப்பு
எஸ்.பி.ஐ வங்கியில் கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. வங்கி வேலை வேண்டும் என நினைப்பவர்கள், இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஜூனியர் அஸோசியட்ஸ் (Junior Associates) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 13735 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன.
முக்கியமாக ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், வட்டார மொழியில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.
Junior Associates
காலியிடங்களின் எண்ணிக்கை : 13735
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் 31.12.2024 க்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர் 01.04.2024 அன்று 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது வரம்பில் சலுகை உண்டு.
சம்பளம் : ரூ. 46,000
தேர்வு முறை :
இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு மூன்று படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.
முதல்நிலைத் தேர்வு:
முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இந்த முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு:
முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) என மொத்தம் 190 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் 40 நிமிடங்கள். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
https://ibpsonline.ibps.in/sbidrjadec24/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
இப்போது உங்களுக்கு விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் கொடுக்கப்படும். அதனைக் கொண்டு உள்நுழைந்து புகைப்படம் மற்றும் கையொப்பத்தைத் பதிவேற்றவும்.
பின்னர் உங்கள் தனிபட்ட விவரங்கள், கல்வி விவரங்கள் உள்ளிட்டவற்றை உள்ளிடவும்.
அடுத்ததாக கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம் :
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.750 ஆக உள்ளது. எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.01.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் பல விவரங்கள் பற்றி அறிய https://sbi.co.in/documents/77530/43947057/16122024_JA+2024+-Detailed+Advt.pdf/6b16e166-78df-2cc9-36a0-3680682d6434?t=1734354989415 என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.