கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எங்கு எப்படி மாற்றுவது?
டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில், வளர்ந்து வந்தாலும் பல இடங்களில் இன்னும், பண நோட்டுகள் வழங்கி பொருள் வாங்கும், முறை மாற்றமடையவில்லை. அவ்வாறு செலுத்தப்படும் பணம், சேதமடைந்திருந்தால் அதைப் பெற்றுக்கொள்ளப் பலரும் மறுப்பர். ஒருவேளை உங்களிடம் அப்படி ஒரு பணம் இருந்தால் அதை எப்படி மாற்றிக் கொள்வது, முழு தொகையும் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறதா?.. என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பணம் நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?
ரிசர்வ் வங்கிதான் மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில், பணத்தை நிர்வாகம் செய்கிறது. அதேபோல ஒரு பணத்தை வடிவமைப்பதில், அரசின் ஆலோசனை பெற்றுத்தான் செயல்படும். வரிசை எண்களின் (serial number) அடிப்படையில் ஆர்.பி.ஐ எவ்வளவு பணம் வேண்டும் என்பதை அச்சகங்களிடம் கோரும். அவற்றை 5 லாக்கர்களில் ஆர்.பி.ஐ பாதுகாத்து வைத்திருக்கும். பரிசோதித்தபின், வங்கிகள் மூலம் ஆர்.பி.ஐ புழக்கத்திற்குக் கொண்டுவரும்.
அதேபோல, வங்கிகளிலிருந்து பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், பரிசோதிக்கப்பட்டு அது நல்ல நிலையிலிருந்தால் மீண்டும் வங்கிகள் மூலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தால், அவற்றைத் தூள் தூளாக்கப்பட்டு அழிக்கப்படும்.
ரூபாய் உருவாக்குவதில் இந்திய அரசின் பங்கு என்ன?
நாணயச் சட்டம் 1906-ன் படி, காலத்திற்குக் காலம் திருத்தங்கள் அடிப்படையில் நாணயங்கள் உருவாக்கும் பொறுப்பு இந்திய அரசின் பொறுப்பில் உள்ளது. நாணயத்தின் வடிவமைப்பினையும், அதன் இலக்கு மதிப்பினையும் இந்திய அரசு தீர்மானிக்கிறது.

ஆர்.பி.ஐ பணத்தை எப்படி சேமித்து வைக்கிறது?
பணத்தாள்களை நாணயங்களையும், மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் பணத்தை பாதுகாக்கும் லாக்கர்கள் வைத்திருக்கும் அதிகாரம் அளித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 4368 லாக்கர்கள் இருப்பதாக ஆர்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிறு மதிப்பு நாணயங்கள் பாதுகாக்க நாடுமுழுக்க 3708 மையங்கள் இருப்பதாக ஆர்.பி.ஐ 2002-ம் ஆம் வெளியிட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளது.
சேதமடைந்த பணத்திற்கு முழு மதிப்புப் பெற அதிகாரம் உள்ளதா?
அரசியல் கோஷங்கள், கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள், 2009 விதி எண் 6(3)-ன்படி சட்டப்படி பணமென கருதப்படமாட்டாது. அதற்கான உரிமை தொகையும் வழங்கப்படாது. “நோட்டு திருப்பித் தருதல்” விதிகளின் விதி எண் 6(3) படி திருப்பி அளிக்கவே ஆர்.பி.ஐ பரிந்துரைத்துள்ளது.
ஒரு ரூபாய் நோட் கிழிந்திருந்தாலோ, ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ, அது சிதைந்த நோட்டாக மட்டுமே கருதப்படும். அவ்வாறு சிதைந்த நோட்டுகள் எந்த வங்கியிலும் வழங்கப்பட்டு மாற்றலாம். ரிசர்வ் வங்கி விதி 2009 படி, அந்த பணத்திற்காக மதிப்பினை பெற்றுக்கொள்ளலாம்.எரிந்து, கருகிப்போன, பிரிக்க முடியாத அளவு ஒட்டிக்கொண்ட பணத்தை எந்த வங்கி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளப்படாது.
பணம் வைத்திருப்பவர், அதை ரிசர்வ் வங்கியின் பண வழங்கல் துறைக்குச் சென்று ஒப்படைக்கும்படி அறிவுறுத்தலாம். அங்குப் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு காணப்படும்.
வங்கிகளில் பெறப்படும் சேதமடைந்த பண நோட்டுகளைச் சரிபார்க்க நோட்டு மாற்றும் விதிகள் 2009-ன் படி, வங்கியில் பொறுப்பு அதிகாரி, வங்கிக்கிளை மேலாளர், கணக்கர் அல்லது பணித்துறையிலுள்ள அதிகாரி ஒருவரை நியமிக்கப்படும். அந்த நோட்டுகள் குறித்த தீர்ப்பினை முடிவு செய்த பின், நியமிக்கப்பட்ட அதிகாரி பெறப்பட்ட தாள் எந்த நிலையில், இருக்கிறது என்ற அடிப்படையில், Pay/Paid/Reject முத்திரையிட்டு தனது கையொப்பத்தை பதிவிட்டு ஆர்.பி.ஐ-க்கு அனுப்புவார்.