தமிழ்நாட்டில் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்
தமிழ்நாட்டில் 15 இடங்களில் நேற்று வெப்பம் சதமடித்த நிலையில், உதகையில் புதிய உச்சமாக 85 டிகிரி பாரன்ஹீட்டிற்கு வெப்பம் பதிவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி, வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் ஏறுமுகமாக உள்ள நிலையில், நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 108 புள்ளி 5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இதனையடுத்து ஈரோட்டில் 107 புள்ளி 96 டிகிரி, திருப்பத்தூரில் 107 புள்ளி 24 டிகிரி, வேலூரில் 106 புள்ளி 88 டிகிரி, திருச்சியில் 106 புள்ளி 34 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்தது. இதே போன்று, சேலத்தில் 105.44 டிகிரி, மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி, மதுரை நகரம் மற்றும் திருத்தணியில் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியது.தருமபுரியை பொறுத்தவரை 104.36 டிகிரி, நாமக்கல் மற்றும் தஞ்சாவூரில் 104 டிகிரி வெப்பம், சென்னை மீனம்பாக்கத்தில் 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
உதகையை வியர்க்க வைத்த வெயில் : எப்போதும் குளுகுளுவென இருக்கும் உதகையிலும், சூரியனின் தரிசனம் உக்கிரமாக இருந்தது. உதகையில் புதிய உச்சமாக நேற்று 85 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. பொதுவாக, சமதளத்தை விட, 1,000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதியில், வெப்பத்தின் அளவு 10 சதவிகிதம் மாறுபடும். அதாவது, தரைத்தளத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், மலைப்பிரதேசத்தில் 90 டிகிரி பாரன்ஹீட்டும் கிட்டத்திட்ட சமமாக உணரப்படும். அந்த வகையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் இரண்டாயிரத்து 300 அடி உயரத்தில் உள்ள உதகையில், 85 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதால், இது கரூரை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
3 நாட்களுக்கு வெப்ப அலைவீசும்
இந்நிலையில், வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.