மே 31 கடைசி தேதி... பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது

Permanent Account Number (PAN) என்ற நிரந்தர கணக்கு எண்ணை வருமான வரித் துறை வழங்கி வருகிறது. நம்முடைய அனைத்து வங்கி, பண பரிவர்த்தனைகளை கணக்கில் எடுக்க, கண்காணிக்க, அலச இந்த பான் எண் அவசியம் ஆகும். இதை வங்கி கணக்குடன் கட்டாயமாக இணைக்க வேண்டும். அதேபோல் ஆதார் அட்டையுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. ஆனால், இன்னும் பலர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.

இதனால், பல்வேறு வருமான வரி மோசடிகள், குளறுபடிகள் நடப்பதை கண்டறிந்துள்ள வருமான வரித்துறை, PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், மாதச் சம்பளத்தில் வழக்கமான டிடிஎஸ் விகிதத்தை விட, இரு மடங்கு கழிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதாவது டிடிஎஸ் மீதான ஷார்ட் டிடெக்‌ஷனில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

எனவே, நீங்கள் இன்னும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் இணைத்து விடுங்கள். ஆன்லைன் மூலம் இணைக்க வேண்டும் என்றால், முதலில் வருமான வரித்துறை (Income Tax e-filing portal) இணையதளத்திற்கு சென்று, முதல் பக்கத்தின் இடது புறத்தில் இருக்கும் குவிக் லிங்க்ஸ் (Quick Links) என்ற தலைப்பின் கீழ் ஆதார் லிங்க் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து Validate பட்டனை க்ளிக் செய்தால், அபராதம் மற்றும் கட்டண விவரங்கள் திரையில் தோன்றும். அதைத் தொடர்ந்து, பான் - ஆதார் இணைப்பிற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க, Continue பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளீடு செய்து, Link Aadhaar என்ற பட்டனை க்ளிக் செய்தால், ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதை உள்ளீடு செய்தால், பான் - ஆதார் இணைப்பிற்கான கோரிக்கை வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும். அது இணைக்கப்பட்ட பிறகு இ-மெயில் மற்றும் மொபைல் எண்ணிற்கு தகவல் வரும்.