தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடக்கம் முதலே தீவிரம் காட்டும் வகையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் அக்டோபர் 12 முதல் 15 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் இது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதால் குறிப்பாக தமிழகம், லட்சத்தீவு மற்றும் அரபிக் கடல் போன்ற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன் படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதிகளில் லேசான சாரலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகம், மன்னார் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதிக்கு மீனவர்கள் அடுத்த வாரம் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இடைஇடையே 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.