வெறும் வயிற்றில் வெந்தைய நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

சிறிய மஞ்சள் நிற விதைகளான வெந்தயம் பெரும்பாலான இந்திய சமையலறைகளில் காணப்படும் ஒரு பொதுவான உணவு பொருளாகும். பெரும்பாலும் உணவுகளை தாளிக்க பயன்படுத்தப்படும் இந்த விதைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல மடங்கு நன்மை அளிக்க கூடியதாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்களிடையே வெந்தயம் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

ஏராளமான நன்மைகளை கொண்டிருந்தாலும் வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது நிச்சயமாக ஏராளமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். குறிப்பாக நீரழிவு நோயாளிகள் வெந்தயம் சாப்பிடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வெந்தயம் சாப்பிடுவதை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள். இந்த பதிவில் வெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பலன்களையும், வெந்தயத்தை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பது பற்றிய சில குறிப்புகளையும் பார்க்கலாம்.


வெந்தயத்தில் நார்ச்சத்து, மினரல்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தில் நம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய 20% இரும்புச்சத்து, 7 சதவீத மாங்கனீசு மற்றும் 5 சதவீதம் மெக்னீசியம் காணப்படுகிறது.

இந்த விதைகள் பசியை குறைத்து வயிறு நிரம்பிய உணர்வை அதிகரிப்பதால் நாம் அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலமாக உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வயிறு மற்றும் குடல் சுவர்களில் ஏற்படக்கூடிய எரிச்சலை ஆற்றும் தன்மை வெந்தய விதைகளுக்கு உண்டு. மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் வெந்தயம் தீர்வளிக்கிறது.

வெந்தயத்தில் காணப்படும் சப்போனின்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளில் இருந்து நமது உடலானது கொலஸ்ட்ரால் உறிஞ்சுவதை குறைக்க உதவுகிறது. சப்போனின்கள் குறிப்பாக LDL அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் உற்பத்தியாவதை தடுக்க உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

வெந்தய விதைகள் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.

அதுமட்டுமல்லாமல் PCOS அல்லது PCOD மற்றும் ரத்த சோகை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க நினைக்கும் தாய்மார்களுக்கு வெந்தயம் உதவுகிறது. வெந்தயம் மாதவிடாய் வலியை குறைக்க உதவுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஆண்களில் டெஸ்டாஸ்டரான் ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு வெந்தயம் கைக்கொடுக்கிறது.

ஆயினும் வீக்கத்தை குறைத்தல், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற வெந்தயத்தின் பலன்களை நிருபிக்க இன்னும் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வெந்தய விதைகளை எவ்வாறு சாப்பிட வேண்டும்?

  • ஒன்று முதல் இரண்டு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

  • காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் இந்த பூஜ்ஜிய கலோரி டிடாக்ஸ் பானத்தை முதல் வேலையாக பருகுங்கள்.

  • ஊற வைத்த இந்த வெந்தய விதைகளை மென்று சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை தரவல்லது.