புதிய டாடா சஃபாரி கார் அறிமுகம்.. இதன் மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியாவின் பிரபல SUV கார்களில் ஒன்றாக இருக்கும் சஃபாரி காரின் புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ். இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.16.19 லட்சமாகும். கூடுதல் வசதி கொண்ட உச்சபட்ச மாடலின் விலை ரூ.25.49 லட்சமாகும். புதுப்பிக்கப்பட்ட டாடா ஹேரியர் காரோடு சஃபாரியின் புதிய மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சஃபாரியில் பல புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, காரின் உட்புறத்தில் மாற்றங்கள், நீண்ட பட்டியல் கொண்ட சிறப்பம்சங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வடிவிலான டாடா நெக்ஸானில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கும் சஃபாரியில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களும் ஒன்றுபோலவே உள்ளன.
புதிய டாடா சஃபாரியில் பகலிலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகள், அப்டேட் செய்யப்பட்ட கிரில் டிசைன், செவ்வக வடிவிலான ஹெட்லைட், அதேபோல் காரின் புன்புற விளக்குகளின் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதோடு சேர்த்து காரின் அலாய் வீல், பின்புற ஸ்கிட் பிளேட் ஆகியவையும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் காரின் ஓரத்தில் சஃபாரி பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.
காரின் உள்ளேயும் பல வடிவமைப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது டாஷ்போர்டு பெரிதாக உள்ளது. 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் வழிகாட்டும் வசதியுடன் கூடிய புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர். ஸ்டீரிங் வீலின் வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது புதிதாக 4-ஸ்போக் வீலுடன் ஒளிரும் தன்மையுடைய லோகோவும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
காரின் சிறப்பம்சங்களை பொறுத்தவரை, பல நாட்களாக வாடிக்கையாளர்கள் கேட்டு வந்த பல்வேறு சிறப்பம்சங்களை இதில் கச்சிதமாக சேர்த்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 10-JBL ஸ்பீக்கருடன் கூடிய ஆடியோ சிஸ்டம், காரில் உள்ள ஏசி-யை கட்டுப்படுத்த வசதியாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் பின்பக்க இருக்கையில் இருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் ஏசியை மாற்றிக்கொள்ள முடியும்.
காற்றோட்டம் மிகுந்த முன்பக்க இருக்கை, பேடில் ஷிஃப்டர், அழகான லைட்டிங் செட்டப் என சொல்லிக்கொண்டே போகலாம். காரில் பயனிப்பவர்களின் பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. புதிய மாடல் டாடா சஃபாரி நான்கு சிலிண்டருடன் கூடிய 2.0 லிட்டர் டீசல் எஞ்சினையும், அதிகபட்சமாக 170 hp பவரையும் 350 Nm இழுவிசையும் கொண்டுள்ளது.
கியர் பாக்ஸைப் பொறுத்தவரை, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு இழுவிசை மாற்றியுடன் கூடிய ஆட்டோமெட்டிக் என இரண்டு ஆப்ஷன் உள்ளது. தற்போது காரில் புதிதாக டிரைவிங் மற்றும் டிராக்ஷ்ன் மோடுகளும் பொறுத்தப்பட்டுள்ளன. டாடா சஃபாரியின் மைலேஜை பொறுத்தவரையில், மேனுவலாக இருந்தால் ஒரு லிட்டருக்கு 16.30கி.மீ தருகிறது. அதுவே ஆட்டோமெட்டிக் கியர் என்றால் ஒரு லிட்டருக்கு 14.50கி.மீ தருகிறது.