ஆம்னி பேருந்துகள் போராட்டம் வாபஸ்... பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் நடவடிக்கை!

இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது என்று தென்னிந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது. 

ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதிமீறலில் ஈடுபட்டதாக 119 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை கண்டித்து இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென்னிந்திய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், ஆம்னி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர் சென்ற பயணிகள் இன்று முதல் சென்னை திரும்ப உள்ள நிலையில், இரு ஆம்னி பேருந்து சங்கங்களும் மாறி மாறி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று இரவு ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பயணிகள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போக்குவரத்து துறை இணை ஆணையர் முத்துவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.