கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சலிங் எப்போது ஆரம்பிக்கிறது ?

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுப் பிரிவுக்கு ஆன்லைனிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பு, உணவு தொழில்நுட்பம், பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது. தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம், உடுமலைப்பேட்டை, தேனி ஆகிய 7 இடங்களில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதில், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள 597 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் இருக்கின்றன. இதில், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 6 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இதேபோல், ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.

இவற்றில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2024 – 25 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

அதன்படி, பி.வி.எஸ்சி.- ஏ.ஹெச் படிப்புக்கு 14,497 பேரும், பி.டெக் படிப்புகளுக்கு 3,000 பேரும் என மொத்தம் 17,497 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்ததும், கடந்த 7 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் 15 பேர் கட்-ஆப் மதிப்பெண் 200-க்கு 200 பெற்று முன்னிலை பெற்றுள்ளனர்.  

7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பில் 45 இடங்கள், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது; 

“பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீடின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பி.டெக் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வுகள் அனைத்தும் நேரடியாக சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வரவேண்டும்.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு பொதுப் பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு www.adm.tanuvas.ac.in, www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. அதற்கான பதிவு மற்றும் கல்லூரிகளின் விருப்பத்தை செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது .  இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டுக்கான கடிதம் செப்டம்பர் 11 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.