நாகை - இலங்கை கப்பல் சேவை.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதையடுத்து கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் தயாரிக்கப்பட்டு அதற்கு செரியாபாணி என பெயரிடப்பட்டது. கப்பல் நாகை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு 2 நாட்கள் சோதனை ஓட்டம் நடந்ததையடுத்து இன்று சேவை தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி காணொளி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டவர்கள் இந்த விழாவில் காணொளி மூலம் பங்கேற்றனர்.

நாகை துறைமுகத்திலிருந்து மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த் சோனாவால் , தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் மோடி, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் வணக்கம் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கப்பல் போக்குவரத்து இருநாட்டு உறவையும் வலுப்படுத்துவதில் மிக முக்கியமான மைல்கல் என்றார். இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் சேவை, போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்துவதோடு வர்த்தகத்தையும் வளர்க்கும் என்றார். இந்தியா-இலங்கை இடையேயான கடல்வழிப் போக்குவரத்துக்கு சங்க இலக்கியங்கள் பட்டினப்பாலை, மணிமேகலையில் சான்று இருப்பதாகவும் பிரதமர் மோடி மேற்கோள் காட்டிப் பேசினார்.

ஜி20 உச்சி மாநாட்டில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்தை கூறியதாக தெரிவித்த பிரதமர் மோடி, அதன்படி தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். அடுத்ததாக ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.