சென்னையில் இனி ஒரே டிக்கெட் போதும் : பேருந்து,புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ இவைகளில் பயணிக்க ....
தற்போது புதிய திட்டமாக, சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில்களில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை செயல்படுத்த உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காகவே சென்னை மாவட்டம் முழுவதும் பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் மூன்றிலும் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க மூவிங் டெக் இன்னொவேஷன்ஸ் (Moving Tech Innovations Private Limited)நிறுவனத்திற்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணி ஆணை வழங்கியுள்ளது.
இந்நிலையில் முதற்கட்டமாக, வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகமாகிறது. 2025 மார்ச் மாதத்தில் புறநகர் ரயில்களிலும் பயணம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வசதிக்கேற்ப நீண்ட நாட்களாக பொது போக்குவரத்துக்கு ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.