தமிழகத்திற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை !!! பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு ...
தமிழகத்தில் இன்று 40 கி.மீ. வேகத் தரைக்காற்றுடன் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறதினாலும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களிலும், 6 முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தீவிரமாக இருந்ததால், கடந்த ஜூன் 1 முதல் 30-ம்தேதி வரை 109 மி.மீ. மழை கிடைத்துள்ளது.
இந்த காலகட்டத்தில் வழக்கமாக 50 மி.மீ. அளவு மழை மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் வழக்கத்தைவிட கடந்த மாதம் 115 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.
மாவட்டஅளவில்அதிகபட்சமாக திருநெல்வேலியில் 417 சதவீதம், விருதுநகரில் 292, திருச்சியில் 249, கரூரில் 246, தேனியில் 238, ராமநாதபுரத்தில் 216,சென்னையில் 210, புதுக்கோட்டையில் 201 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.