செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் மொழிகள் இலவசமாக கற்று கொள்ள தமிழக அரசு ஏற்பாடு ..
தமிழ்நாட்டில் செவிலியர் படிப்பினை முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்பும் செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலை வாய்ப்பு பெறும் வகையில், அவர்களுக்கு அம்மொழியினை இலவசமாக கற்றுக்கொடுக்க தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ் நாட்டில் ”முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது. வெளிநாட்டு மொழியை கற்க விரும்பும் செவிலியர்கள் பி.எஸ்.சி நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் படித்திருக்க வேண்டும். செவிலியர்களின் வசதியை கருத்தில்கொண்டு மொழிப்பயிற்சியானது ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விரும்பும் செவிலியர்கள் முழு விவரங்களையும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 63791 79200 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.” என்றும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.