டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் அசுர வேகத்தில் பரவிவருகிறது. மழை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொசு ஒழிப்புக்காக கொசு மருந்துகள் தெளிப்பு மற்றும் லார்வா முட்டைகளை ஒழிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இந்திய அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் உள்பட பலர் டெங்குவால் கடுமையான உடல் நல பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஏடிஸ் என்ற கொசுவின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகும் போது நமது உடலில் உள்ள பிளேட்டுகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் கடுமையான உடல் சோர்வையும், சில நேரத்தில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. எனவே தான் டெங்கு பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
டெங்கு எப்படி பரவுகிறது?
ஏடிஸ் என்ற கொசு மனிதர்களைக் கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. இந்த கொசுக்கள் கடித்து 5 அல்லது 10 நாள்களுக்குப் பிறகு தான் டெங்கு பாதிப்பு குறித்த அறிகுறிகள் தெரிகிறது. குறிப்பாக தலைவலி, காய்ச்சல், எலும்பு வலி, அசௌகரியம், தசைவலி, உடல் அசதி. கண்கள் சிவந்து போதல்,வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படக்கூடும். டெங்கு கொசு பகலில் தான் மனிதர்களைக் கடிக்கும் என்பதால், காலை நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த கொசுக்கள் கை முட்டி மற்றும் கால் முட்டி ஆகிய பகுதிகளில் தான் அதிகளவில் கடிக்கிறது.
மற்ற கொசுக்களைப் போன்றில்லாமல் டெங்கு கொசுவை எளிதாக அடையாளம் கண்டுப்பிடித்து விடமுடியும். உருவத்தில் பெரியதாகவும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்திலான கோடுகள் அதிகளவில் இருக்கும். மேலும் தண்ணீர் தேங்கும் இடத்தில் கொசுக்களின் முட்டைகள் உற்பத்தியாகும் என்பதால், வீட்டைச்சுற்றியுள்ள இடங்களில் உள்ள தேவையில்லாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்.
- டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசு நல்ல தண்ணீர் மூலம் தான் அதிகளவில் உற்பத்தியாகிறது. எனவே வீட்டில் தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்கள் மற்றும் வீட்டைச்சுற்றியுள்ள குப்பைகள், பழைய பாட்டில்கள் மூலம் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- கொசு மருந்துகளைப் பயன்படுத்தி கொசு கடிப்பதைத் தடுக்கலாம். மேலும் நீண்ட கை சட்டைகள் மற்றும் நீண்ட பேண்ட்கள் அணியலாம்.
- வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலைகளை அடிக்கவும். இல்லையென்றால் கொசுக்கள் உள்ளே வராமல் இருக்கும் வகையில் கதவுகளை மூடி வைக்கவும்.
- வீட்டில் உள்ள பெரியவர்களுக்குக் கூட டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் அறிகுறிகளை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும். ஆனால் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் பாதிப்பை உடனடியாக அறிந்துக்கொள்ள முடியாது. எனவே குழந்தைகளைத் தூங்க வைக்கும் தொட்டில் அல்லது படுக்கைகளில் கொசு வலைகளைப் பயன்படுத்தவும்.
- என்ன தான் மாநில சுகாதாரத்துறை டெங்கு வைரஸைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தாலும், பொது மக்களும் மேற்கூறிய முறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.