‘ஒரு நிமிடத்தில் பட்டா வா ? எப்படி?
நம்ப முடியாத அறிக்கை , ‘ஒரு நிமிடத்தில் பட்டா வழங்கப்படும்...’ என்கிற அறிவிப்பை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கொண்டுவந்துள்ள முக்கிய அறிவிப்புதான் இது. ஆம், தானாக நடந்தேற வேண்டிய மிகமிகச் சாதாரண விஷயம்தான் பட்டா. பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலத்தைப் பதிவு செய்த உடனேயே, சம்பந்தப்பட்டவர் பெயருக்கு மாறுதலாக வேண்டும். ஆனால், அப்படி நடந்ததாக சரித்திரமே இல்லையே, தமிழகத்தில்
பொதுவாக வீடு, மனை, தோட்டம், விவசாய நிலம் என்று வாங்குபவர்களுக்கு காலங்காலமாகத் தொடரும் தலைவலியே... பட்டாதான். பல்லாண்டுகளாக நீடிக்கும் இக்கொடுமையை ஒழித்துக்கட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றமே தலையிட்டு, ‘பத்திரப்பதிவு செய்யும்போதே பட்டா மாறுதலுக்கும் பணம் வாங்கப்படுகிறது. எனவே, உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அதைத் தாமதப்படுத்தக் கூடாது’ என்று உத்தரவு போட்டு ஆண்டுகள் பலவாகின்றன. ஆனால், அந்த உத்தரவைக் காலில் போட்டுத்தான் மிதிக்கிறார்கள் அதிகாரிகள்.