குரூப்-1 தேர்வுக்கு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் படித்து வெற்றி பெறலாம் ...

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி 1 (TNPSC GROUP I) போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனருக்கான காலி பணியிடங்களை குரூப்-1 தேர்வு மூலம் பூர்த்தி செய்கின்றனர்.


குரூப்-1 தேர்வு முதல் நிலை தேர்வு, மெயின்ஸ்,நேர்காணல் என மூன்று கட்டமாக நடைபெறும். இதில் முதல் கட்ட தேர்வில் 300 மதிப்பெண்களும் மெயின்ஸ்750 மதிப்பெண்களும், நேர்காணலில் 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு நடைபெறும். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் செயல்பட்டு வருகிறது.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் TRB போன்றபல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும்வகுப்புகளில் ஆண்டுதோறும் அதிகளவில் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பெற்றுள்ளனர்.

காலி பணியிடங்கள் விபரம்: தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 1 (TNPSC GROUP I) தேர்விற்கு 90 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது.

வகுப்பு நேரம்: தொகுதி 1ற்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC Group I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும் இந்த பயிற்சியின் போது அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.