தெரியாத நம்பர்ல இருந்து வீடியோ கால் வருகிறதா? இதை மட்டும் செய்திடாதிங்க...எச்சரிக்கும் சைபர் கிரைம் ...
ஒரு சிறிய மொபைல் போன் தான் எல்லாம் என்றாகி விட்ட இன்றைய காலகட்டத்தில், மொபைல் போன் உதவியால் தொலைவில் உள்ள ஒருவரை கூட நேரடியாக தொடர்பு கொண்டு வீடியோ கால் மூலம் முகம் பார்த்து பேசலாம். இந்த வீடியோ கால் வசதியை இன்றைய சமூக வலைத்தளங்கள் அனைத்தும் நமக்கு தருகின்றன.

இந்த வீடியோ கால் வசதியை பயன்படுத்தி நமக்கு தெரிந்தவர்கள் தான் நம்மை தொடர்பு கொள்கிறார்களா என கேட்டால் இல்லை யார் வேண்டுமானாலும் நம்மை இதன் மூலம் தொடர்பு கொள்ளலாம். சில சமயங்களில் தெரியாத எண்களில் அல்லது ஐடியில் இருந்து வீடியோ கால் வரும் போது நாமும் ஒரு ஆர்வத்தில் அந்த அழைப்பை ஏற்றிருப்போம், ஆனால் அப்படி முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்பது சில சமயங்களில் நம்மை பிரச்சனைகளில் கொண்டு போய் விடலாம்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் மக்களிடையே சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பஷித் இது பற்றி பேசிய போது,எதிர் முனையில் பொதுவாக வீடியோ கால் திரை நம்முடைய முகம் பெரியதாகவும், அவர்களுடைய முகம் சிறியதாக தான் தெரியும். ஆனால் அதை மாற்றியமைக்க முடியும். சில சமயங்களில் அழைப்பு வரும் போது, எதிர்முனையில் உள்ள நபர் நிர்வாணமாகவோ அல்லது அரைநிர்வாணமாகவோ நம் முன் தோன்றலாம். நாம் அந்த அழைப்பை ஏற்கும் பட்சத்தில் அதை பதிவு செய்து அந்த நபர் நம்முடைய உறவினர்கள் நண்பர்களுக்கு அதை அனுப்பி வைப்பதாக பணம் கேட்டு நம்மை மிரட்ட நேரிடும். இதில் மாட்டிக்கொண்ட இளைஞர்கள் சிலர் தவறான முடிவுக்கு கூட சென்று விடுகின்றனர்.
இது போன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும் போது பயமில்லாமல் சைபர் பாதுகாப்பு பிரிவில் புகார் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். NCRP என்ற சைபர் பாதுகாப்பு வலைத்தளத்திலும் புகார் தெரிவிக்கலாம். புகார் மூலம் மட்டுமே இதை எதிர்கொள்ள வேண்டும். அப்படி இல்லை இந்த பிரச்சனையே வேண்டாம் என்றால் முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை ஏற்காமல் தவிர்த்து விட வேண்டும் என்றார்.அதுவும் சில நேரங்களில் தெரியாத நபரிடம் இருந்து வரும் ஆடியோ கால் களையும் தவிர்ப்பது நல்லது ...
என்ன செய்யலாம்:
ஒருவேளை எதிர்முனையில் இருப்பது தெரிந்த நபராக இருக்குமோ என சந்தேகம் இருந்தால், அழைப்பை ஏற்றுக்கொண்டு கேமராவை மறைத்து முகம் காட்டாமல் எதிரில் இருப்பது தெரிந்தவர் தான் என்பதை உறுதி செய்து கொண்டு பின்பு முகம் காட்டி பேசலாம்.