ரூ.78 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு குருவை சாகுபடி தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் உள்ள டெல்டா விவசாயிகளை காக்கும் வண்ணமாக , 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டின் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால், சாகுபடிக்காக கடந்த 12ஆம் தேதி தண்ணீரை திறந்துவிட முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். எனினும், விவசாயிகளை காக்கும் விதமாக குறுவை சாகுபடி தொகுப்பை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மற்றும் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில், 3 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்ற மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு 4 ஆயிரம் வீதம், ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 40 கோடி ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது.

அதைத்தொடர்ந்து, ஆளில்லா வானூர்திக் கருவி, சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் உள்ளிட்ட 442 கருவிகள் வழங்கிட 7 கோடியே 52 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளதாகவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்புக்காக, 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.