பொது தேர்வில் சாதித்த 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லட் வழங்கி பாராட்டிய பிரபல இயக்குநர்....

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. 


இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் இரண்டு மதிப்பெண்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்குக் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாகப் பிரபலத் திரைப்பட இயக்குநர் பிடி செல்வகுமார் கையடக்கக் கணினி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில்  பல்வேறு அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் மத்தியில் இயக்குநர் பிடி செல்வகுமார் பேசும் போது, “கல்வியானது வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. கஷ்டங்களை இஷ்டத்தோடும் வலிகளை சுகத்தோடும் படித்து இத்தனை மதிப்பினைப் பெற்ற மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுக்கள்.

வரும் காலங்களில் பல சவால்களைச் சந்திக்க தாங்கள் படித்த கல்வி உதவும். பேப்பர் பாயாக உழைத்து கற்றுத் தேர்ந்த அப்துல் கலாம் அவர்களைப் போல் திறமையாளர்கள் இங்கே உள்ளீர்கள். படிக்கிற வயதில் வேறு சிந்தனைகளில் ஈடுபடாமல் உங்களைத் தங்கமாக மிளிர வைப்பது தான் கல்வி.

இதில்  வெற்றி பெற்றவர்களின் குடும்பங்களின் புத்துணர்வு முகமாக அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விழா தான் இது. ஒவ்வொரு முறையும் மாணவர்களுக்கு உதவி செய்யும்போது மனதெல்லாம் பூரிப்பாக, வானத்தில் பறப்பது போன்று உணர்வேன். பல வலிகளைத் தாண்டி தான் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகின்றேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பள்ளி தலைமை ஆசிரியை மேரி ஹெப்சிபா, பேராசிரியை ஸ்ரீரெங்கநாயகி, வக்கீல் பாலகிருஷ்ணன், அனிதா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.