கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குழித்துறை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 18 அடி கொண்ட சிற்றார் அணையின் நீர்மட்டம் 13 அடியை கடந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட சார் ஆட்சியர் கவுஸிக் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12 வரையில் வகுப்புகள் இன்று தொடங்க இருந்த நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.