சென்னையை நோக்கி படையெடுத்த மக்கள் கூட்டம்...

தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி படையெடுத்த மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரயில்களிலும் கடுமையான கூட்ட நெரிசலுக்கு இடையே மக்கள் பயணித்தனர்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்து 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல வார விடுமுறை மற்றும் மிலாது நபி, காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வந்ததால் பலரும் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பயணப்பட்டனர். இந்நிலையில், தொடர் விடுமுறை நேற்றுடன் முடிந்து. இன்று முதல் பள்ளிகள், அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதன் காரணமாக, சொந்த ஊர் சென்றிருந்த தென் மாவட்ட மக்கள், குடும்பம் குடும்பமாக சென்னைக்கு படையெடுத்தனர்.

இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை திடீரென கடுமையாக ஏற்றப்பட்டது. பேருந்து, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் சென்னை திரும்பியதால் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் அதிகளவிலான வாகனங்கள் வந்ததால், பயணிகள் அவதியடைந்தனர். அதேபோன்று, நெல்லை ரயில் நிலையத்திலும் கடுமையான பயணிகள் கூட்டம் காணப்பட்டது. இதனால், கிடைத்த இடங்களில் அமர்ந்து கொண்டும், நின்றபடியும் மக்கள் பயணித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி வாகனங்கள் சென்றதால் இரண்டு கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அதேபோல் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியிலும் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் திருச்சி- சென்னை வழித்தடத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.