மருந்தாக சாப்பிடுவதின் மூலம் எமனாக மாற்றப்படும் ஆன்டிபயாடிக்!

ஒரு குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்துக்கு இதுவரை கட்டுப்பட்ட ஒரு வகை பாக்டீரியா, அதே மருந்துக்கு இப்போது கட்டுப்பட மறுத்தால், அந்தத் தன்மையை ‘ஆன்டிபயாடிக் எதிர்ப்பாற்றல்’ என்கிறோம்.


இந்த வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வது பலருக்கு இப்போது இயல்பாகிவிட்டது. இந்த நிலைமை நீடித்தால், பாக்டீரியா கிருமிகளுக்கு எதிராகத் தற்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக்குகள் செயல்படாமல் போய்விடும். அதன் விளைவாக, வருங்காலத்தில் சாதாரண நோய்களைத் தீர்ப்பதுகூட பெரும் சவால் ஆகிவிடும். இந்தியா இப்படி சந்திக்க இருக்கும் மிக முக்கியமான பிரச்னை பற்றி அடுக்கடுக்கான அதிர்ச்சித் தகவல்களை மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அண்மையில் அறிவித்திருக்கிறது. 


சர்வ தேச நாடுகளுடன் ஒப்பிடும் பொது  இந்தியாவில்தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் மிக அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.. சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளில் 38 சதவிகிதம் பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆன்டிபயாடிக்குகள் தரப்படுகின்றன. நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக்குகள், நோய் வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாகவும் பயன்படுத்தப்படுகின்றன; மிகவும் கவனித்துப் பேண வேண்டிய வீரியமிக்க ஆன்டிபயாடிக்குகள் (Watch type drugs) இந்தியாவில்தான் அதிக பயன்பாட்டில் உள்ளன' என்று கவலை தரும் தகவல்களை அடுக்குகிறது அந்தத் துறை.