பால் விலை திடீர் உயர்வு... ஒரு லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தப்பட்டுள்ளது

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதை பலரும் விமர்சித்து வரும் நிலையில், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அமுல் பால் விலையும் உயர்த்தப்பட்டு மக்களை வியப்புக்குள்ளாகியுள்ளது .


இந்நிலையில், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 வரையும், அரை லிட்டருக்கு ரூ.1 வரையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமுல் கோல்டு, அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் மில்க் என அனைத்து அமுல் பால் வேரியண்ட்களின் விலையும் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாகவே அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் ரூ.64ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.66 ஆக உயர்ந்துள்ளது. அமுல் டீ ஸ்பெஷல் பால் விலை ரூ.62ல் இருந்து ரூ.64ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தயிர் விலையும் உயர்ந்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது. உற்பத்தி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கு செலவை ஈடுகட்டும் விதமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.