தமிழ் நாட்டில் 36 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு !!!

வருடந்தோறும்  முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டணத்தை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதன்மை சுங்கச்சவாடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், அதற்கு முன்பே மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நிறைவடைவதை அடுத்து புதிய சுங்கச்சாவடி கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கசாவடியில் கார், ஜீப், வேன் ஆகியவற்றிக்கு ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் 5 ரூபாய் உயர்ந்து ரூ.110 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகுரக சரக்கு வாகனங்களின் கட்டணமும் பேருந்து, லாரி உள்ளிட்டவற்றிற்கான கட்டணமும் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல், 3 அச்சு முதல் 6 அச்சு கனரக வாகனங்களுக்கு ரூ.10 கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 7 அச்சு அல்லது அதற்கு மேல் அச்சு சக்கர கனரக வாகனங்களுக்கும் 10 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம்  சுங்கசாவடியிலும்  கார், ஜீப், வேன் ஆகியவற்றிக்கு ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக சரக்கு வாகனங்களின் கட்டணமும் பேருந்து, லாரி உள்ளிட்டவற்றிற்கான கட்டணமும் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல், 3 அச்சு முதல் 6 அச்சு கனரக வாகனங்களுக்கும் ரூ.10 கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 7 அச்சு அல்லது அதற்கு மேல் அச்சு சக்கர கனரக வாகனங்களுக்கு 20 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் சுங்க சாவடியில் கார், ஜீப், வேன் மற்றும் இலகு ரக வாகனத்திற்கு 5 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இலகு ரக வணிக வாகனங்களுக்கும் அதே அளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு அச்சு கனரக வாகனம் மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு 10 ரூபாயும் மூன்று அச்சு கனரக வாகனங்களுக்கு 15 ரூபாயும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு அச்சு முதல் ஆறு அச்சு சக்கர கனரக வாகனங்களுக்கு 20 கட்டணம் உயர்த்தப்பட்டு 660 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம்  திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியிலும் ஐந்து ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுளளது. இதே போல், அரியலூர் மணகெதி, திருச்சி கல்லக்குடி, வேலூர் வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி உள்ளிட்ட 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு முறை பயணம் செய்வதற்கான மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கக் கட்டணம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதந்திர சுங்கச்சாவடி கட்டணமும் 100 முதல் 400 ரூபாய் வரை விலை உயர்வை கொண்டுள்ளது .