வருவாயை அள்ளி தந்த வணிக வரித்துறை..! தமிழ் நாடு அரசு அசத்தும் மெகா பட்டியல் வெளியீடு ....

தமிழ் நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக ஆட்சியில் வணிகவரித்துறை முன்னணி வகிக்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் கொள்கிறது . கடந்த 3 ஆண்டுகளில் வணிகவரித்துறையில் 47.19% கூடுதலாக அதிக வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைத்துள்ளதையும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


இதன் வாயிலாக தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,"தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வணிக வரித்துறையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான செயல்திறன்மிக்க ஆட்சியில், வணிகவரித் துறையின் வாயிலாக பல்வேறு சீரமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

தமிழ் நாட்டிலுள்ள வணிகர்கள் பயன் பெரும் விதமாக  புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சமாதான் திட்டம், வருவாய் இழப்புகளைக் கண்டறிந்து, வருவாய் வளர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், எனது விலைப்பட்டி எனது உரிமை, கட்டணமில்லா சேவை மையம், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் வணிக நட்புச் சூழலை உருவாக்கிட எளிய வணிகப்பிரிவு உருவாக்கம், வணிகர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல, நல்லபல திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளதன் பயனாக, வணிகவரித் துறையில் ஏறத்தாழ 47.19 சதவீதம் கூடுதலாக அதிக வருவாய் ஈட்டப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இந்த வருவாயின் மூலமாக  தமிழ்நாட்டில் உள்ள  ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில், இந்தியாவில் இதுவரையில் எந்த மாநில அரசுகளும் முன்னெடுக்காத வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அருந்தவப் புதல்வர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு க ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் உதித்த திட்டங்களான விடியல் பயணத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு, ஏழை எளிய மக்களின் ஏகோபித்த நல் ஆதரவுடன் முன்னணி மாநிலமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்து வருகிறது.
இங்கு  சிறு அளவில் வணிகத்தில் ஈடுபடும் வணிகர்களின் நலனைப் பாதுகாத்திடும் பொருட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிலிருந்த 1989 ஆம் ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக, வணிகர் நல வாரியத்தினை உருவாக்கிச் சாதனை படைத்தார். ஏறத்தாழ 88 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த வாரியத்தின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்களான குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, விளையாட்டு வீரர்களுக்கான உதவி, சிறு கடைகள் அமைத்திட நிதியுதவி, திருமண உதவி மற்றும் விபத்துக்கால உதவி என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி முந்தைய சட்டங்களின் வரி நிலுவைகளை வசூலிக்கும் பொருட்டு, வணிகர்கள் பயனடையும் வகையில் சமாதான திட்டம் 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிகள் (நிலுவைகளை தீர்வு செய்தல்) சட்டம் (சட்ட எண் 24/2023) இயற்றப்பட்டு 16.10.2023 முதல் 31.03.2024 வரை நடைமுறையில் இருந்தது. இத்திட்டத்தின் கீழ், ரூ.50,000 வரை நிலுவைத் தொகை உள்ள 1,15,805 இனங்களில் மொத்தக் கேட்புத் தொகையான ரூ. 142.56 கோடியை தள்ளுபடி செய்து ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ரூ.50,000-க்கு மேல் நிலுவைத் தொகை இருந்த இனங்களில், ரூ.247.89 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது, இது முந்தைய சமாதான திட்டங்களுடன் ஒப்பிடும் போது இதுவரை வசூலானதில் அதிகபட்ச தொகையாகும்.

ரூ. 39.29 கோடி மதிப்பீட்டில் 24 வணிக வரி அலுவலகங்களுக்கான 12 வணிக வரி புதிய கட்டடங்கள், ரூ. 19 கோடி மதிப்பீட்டில் வணிகவரித்துறையின் சுற்றும் படை அலுவலர்களுக்கு 100 புதிய வாகனங்கள், ரூ.3.06 கோடி மதிப்பீட்டில் சுற்றும் படை அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், உரிய அறிவுரைகளை வழங்கிடவும் புதிய மாநில மைய கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த நிதியாண்டில் துறையின் நுண்ணறிவுப் பிரிவு ஆய்வுக் குழுக்கள் ரூ. 1095.93 கோடி வருவாயும் சுற்றும் படைகள் மூலமாக ரூ.217.68 கோடி வருவாயும் பெறப்பட்டுள்ளன.

● திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்ட ஏழு புதிய நிர்வாகக் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதிக வரி செலுத்துவோர் பிரிவு உட்பட நிர்வாக கோட்டங்களின் எண்ணிக்கை 12-லிருந்து 19-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

● செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், ஓசூர், திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்ட ஆறு புதிய நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டதன் மூலம் நுண்ணறிவு கோட்டங்களின் எண்ணிக்கை 9-லிருந்து 15-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

● ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கு இணையாக குறைந்தபட்சம் ஒரு வணிகவரி மாவட்டத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்காக துறையின் கள அலுவலகங்கள் மறுசீரமைக்கப்பட்டு, 13 புதிய வணிகவரி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், வணிகவரி மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 42-லிருந்து 55-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட வரி ஆய்வுக்குழு: வணிகவரித்துறையில் 30.12.2022 அன்று புதிதாக உருவாக்கப்பட்ட வரி ஆய்வுக் குழு (TRU) பரிந்துரை/பகுப்பாய்வு அடிப்படையில் முதல் கட்டமாக மார்ச் 2024 இல் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 510.09 கோடி கூடுதல் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (IGST) தீர்வு கிடைத்துள்ளது.

வருவாய் இழப்புக்களை ஆராய இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-ஹைதராபாத் (IIT-Hyderabad) புரிந்துணர்வு ஒப்பந்தம் வணிகவரித்துறையில் இதுவரையில் இல்லாத வகையில், வருவாய் இழப்புகளை தரவுகள் பகுப்பாய்வு (Big data Analytics) மூலம் ஆராய்ந்து வருவாய் வளர்ச்சியைக் கூட்டும் இனங்களை கண்டறியும் வகையில் முதன்முறையாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-ஹைதராபாத் (IIT-Hyderabad) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொண்டதன் அடிப்படையில், கடந்த நான்கு மாதங்களில் ரூ.129.77 கோடி கூடுதலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. எளிய வணிகப் பிரிவு தொடக்கம்: அரசுக்கு வருவாய் ஈட்டும் வகையிலும், வணிகம் செய்வதை எளிதாக்கிடும் வகையிலும் வணிகவரித்துறையில் முதன்முறையாக கடந்த ஜூலை திங்கள் 2023 முதல் 'எளிய வணிகப்பிரிவு' தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், தனி தணிக்கை பிரிவு, கூடுதல் ஆணையர் (கணினிகள்) மற்றும் கூடுதல் ஆணையர் (வரி ஆய்வு) ஆகிய இரண்டு புதிய பணியிடங்கள், 1000 உதவியாளர் பணியிடங்கள் தரம் உயர்த்தி 840 துணை வணிகவரி அலுவலர் பணியிடங்களாகவும் 160 வணிகவரி அலுவலர் பணியிடங்களாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வுகள் துறையின் பல்வேறு நிலைகளில் உத்தரவிடப்பட்டு, 7 கூடுதல் ஆணையர்கள், 23 இணை ஆணையர்கள், 76 துணை ஆணையர்கள், 96 உதவி ஆணையர்கள், 296 மாநில வரி அலுவலர்கள் மற்றும் 975 துணை மாநில வரி அலுவலர்கள் ஆகியோர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.

 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் தமிழ்நாடு வணிகவரித் துறையின் வரலாற்றில் முதன்முறையாக 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வணிகர் நல வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக, 1 இலட்சம் ரூபாயாக இருந்த குடும்ப நல உதவி ரூபாய் 3 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் இதயம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 50 ஆயிரமும், செயற்கை சிறுநீர் பிரிப்பு, கதிர்வீச்சு அறுவை சிகிச்சைகளுக்கு ரூபாய் 25 ஆயிரமும், கருப்பை அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 20 ஆயிரமும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடனும் தமிழ்நாடு எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றிட முனைப்புடனும், அர்ப்பணிப்புடனும் ஆற்றி வரும் பணி அளவிடற்கரியது. அந்த வகையில், வணிக வரித்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு புதிய திட்டங்களின் மூலம் இனிவரும் காலங்களில் அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாயினை உறுதி செய்யும்." என கூறப்பட்டுள்ளது.