தற்சார்பு கிராமங்களை உருவாக்க திராவிட மாடல் அரசு உழைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான், கிராம சபை கூட்டங்களை முறையாக- தடங்கல் இன்றி நடந்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மக்களாட்சி முதலில் மலர்ந்த இடம் கிராமங்கள்தான்

கிராமப்புற மக்களுடைய குரல் எப்போதும் எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது போல கிராமசபைக் கூட்டங்கள் தடையில்லாமல் நடத்தி கொண்டு வருவதாகக் கூறுகிறோம். ’கிராம சபை’ என்ற அமைப்பு தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சோழர் காலந்தொட்டே பழக்கத்தில் இருந்து வருவதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். கல்விக்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு கிராம சபைகள் பாலமாக இருக்க வேண்டும் என்றார்.

கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க அழைப்போம்...

கிராமசபையில் பங்கெடுத்த நீங்கள், பங்கேற்காத ஊர் மக்களிடம் போய் சொல்லுங்கள், கிராம சபையை ஒரு ஆக்கப்பூர்வமான கருத்து பரிமாறக் களமாக கருதி கலந்து கொள்ள வேண்டும் என்று.

ஊராட்சிகளின் அனைத்து பகுதிகளையும் முழுமையான வளர்ச்சியடைய சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம், அவர்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களை கேட்டறிய வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

கிராம ஊராட்சி திட்டங்களை அங்கீகரித்தல் உள்ளிட்ட கிராம சபைகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் குரலை எதிரொலிக்கும் மன்றமாக கிராம சபை கூட்டங்கள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பழங்குடியினர் கலந்து கொள்வதை உறுதி செய்க...

மகளிர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகளவில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கிராம சபையில் அவர்கள் கருத்துகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கிராம சபை நடைபெற்ற விவரங்களை குறிக்க, பதிவேடு பராமரித்து எல்லோருடைய கருத்துகளையும் பதிவு செய்ய வேண்டும்.

கிராமங்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம்...

கிராமங்களுடைய-கிராம மக்களுடை ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் சிறப்பு கவனத்தை திமுக அரசு செலுத்தி வருவதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், நகர்புறங்கள் வளர்ந்தால் மட்டும் போதாது, கிராமப்புறங்களும் வளர்ந்தாக வேண்டும் என்றார்.

தற்சார்பு கிராமங்களை உருவாக்க அரசு உழைக்கும்...

தற்சார்புள்ள கிராமங்கள், தன்னிறைவு பெற்ற கிராமங்கள், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்கள், சமூக வளர்ச்சி பெற்ற கிராமங்கள் ஆகியவற்றை உருவாக்க திராவிட மாடல் அரசு உழைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்தாக வேண்டும் என்பதை மனதில் வைத்துதான் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.