உணவு பிரியர்களை கவரும் ரொட்டி மார்க்கெட் மூன்று ரூபாய்க்கு ரொட்டி ...

இந்திய நாட்டில் சப்பாத்தி உண்ணக்கூடியவர்கள் அதிகம் .அதுவும் உத்தரபிரதேசத்தில் உள்ள ப்ராயக்ராஜ் மக்கள் சப்பாத்தி செய்வதற்கு இந்தளவிற்கு கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இருக்கவே இருக்கிறது சப்பாத்தி மார்க்கெட். இந்த மார்க்கெட்டில் எப்படி சப்பாத்தி தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இங்குள்ள கடைகளில் துரித உணவுகளோ அல்லது காய்கறிகளோ விற்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக சுடச்சுட சப்பாத்தி மட்டுமே தயாராகிறது.


பல நபர்களால் பாராட்டப்படும் இந்த வீடியோவில் , சப்பாத்தி மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதை பார்வையாளர்களுக்கு ஒருவர் விளக்குகிறார். ப்ராயாகராஜின் காலனல் கஞ்ச் அருகே உள்ள ஏடிஎம் சந்திப்பு சலையில் இந்த மார்க்கெட் உள்ளது. இங்குள்ள 8 கடைகளிலும் சப்பாத்தி மட்டுமே சமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சப்பாத்தி ரூ.3 என விற்கப்படுகிறது. மொத்தமாக வாங்கினால் ரூ.10-க்கு நான்கு சப்பாத்தி கிடைக்கிறது.

ஒவ்வொரு நாளும் இந்த இடத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக சொந்த ஊரைவிட்டு வேலைக்காக வெளியூர் வந்திருப்பவர்களும் மாணவர்களும் தான் இங்கு அதிகமாக சப்பாத்தி வாங்குபவர்களாக இருக்கிறார்கள். வீட்டில் பருப்பு கடையலோ அல்லது உருளைக்கிழங்கு மசாலாவோ செய்தால் மட்டும் போதும். கடையிலிருந்து சுடச்சுட வாங்கிவந்த சப்பாத்தியை தொட்டு சாப்பிட்டு அடுத்த வேலையை பார்க்க போகலாம். இதன் மூலம் பலருக்கும் நேரம் மிச்சமாகிறது.


பண வீக்கம் காரணமாக உணவு பொருட்களின் விலையும் ஏறியுள்ளது  , விலை குறைவான இந்த சப்பாத்தி பலருக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆனால் இந்த வீடியோவை பார்த்த பல நெட்டிசன்களும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போலித்தனத்தை சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்கள் ஆரோக்கியமற்ற துரித உணவுகளுக்கு நூற்றுக்கணக்கில் செலவு செய்வார்கள். ஆனால் ரூ.3 கொடுத்து சப்பாத்தி வாங்க தயங்குவார்கள். ரூ.20 கொடுத்து பானிபூரி சாப்பிடுகிறார்கள். ஆனால் மூன்று சப்பாத்தி ரூ.10 என்று சொன்னால் அவர்களுக்கு விலை அதிகமாம் எனப் பலரும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

பலர் இவற்றை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளனர்  இன்னும் சிலரோ இந்த சப்பாத்தி மார்க்கெட் செயல்படும் தன்மையை பாராட்டியுள்ளனர். உண்மையிலேயே இதுவொரு புதுமையான யோசனை. ஏழ்மை நிலையில் இருக்கும் பல மாணவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என ஒரு யூசர் கருத்து தெரிவித்துள்ளார்.