தபால் நிலையத்தில் இருக்கும் அருமையான சேமிப்பு திட்டங்கள்

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவது ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும்

பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது அனைவரது மனதிலும் விதையாக முளைத்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். பணத்தை சேமிப்பதற்கான முக்கியத்துவம் தற்போது உணரப்பட்ட வருவதன் காரணமாகவே பலர் தங்களது பணத்தை முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் முதலீடு என்றால் பெரிய அளவிலான தொகை தேவைப்படுமே என்ற எண்ணம் இன்னும் பலருடைய மனதில் இருக்கத்தான் செய்கிறது.

எனினும், 1000 ரூபாய் இருந்தால் கூட சிறப்பான ஒரு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்து, நல்ல ரிட்டன்களை பெறலாம் என்பதை உண்மை. "1000 ரூபாய் வைத்து என்ன செய்ய முடியும்?" என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா. இந்த கேள்விக்கான பதிலை இப்பொழுது பார்க்கலாம். 1000 ரூபாய் வைத்துக் கொண்டு என்னென்ன மாதிரியான சேமிப்புத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்த விளக்கமான பதிவு இது.


போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்ட்

தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்குவது ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாக இருக்கும். சேவிங்ஸ் அக்கவுண்ட் திறப்பதற்கு குறைந்தபட்சமாக 500 ரூபாய் இருந்தால் போதுமானது. இதனை சிங்கிள்  அக்கவுண்டாகவோ, ஜாயிண்ட் அக்கவுண்டாகவோ நீங்கள் ஆரம்பித்து கொள்ளலாம். தற்போது சேவிங்ஸ் அக்கவுண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் வட்டி கணக்கிடப்பட்டு, குறிப்பிட்ட அக்கவுண்டுக்கு கிரெடிட் செய்யப்படுகிறது. சேவிங்ஸ் அக்கவுண்ட் வைத்திருக்கக் கூடிய நபர்கள் 10,000 வரையிலான தொகையை டேக்ஸ் எக்ஸம்ப்ஷனாக பெற்றுக் கொள்ளலாம்.

ஐந்து வருட போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) அக்கவுண்ட்

சிங்கிள் அல்லது, இரண்டு, மூன்று நபர்கள் கொண்ட ஜாயின்ட் ரெக்கரிங் டெபாசிட் அக்கவுண்டிற்கு தற்போது 6.50 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இதில் 100 ரூபாய் வரையிலான குறைந்தபட்ச முதலீட்டு தொகை ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் 60 தவணையாக பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டம் ஐந்து வருடத்தில் மெச்சூரிட்டி ஆனாலும் மூன்று வருடங்கள் நிறைவு பெற்ற பிறகு குறிப்பிட்ட அளவு பணத்தை வட்டியுடன் வித்ட்ரா செய்து கொள்ளலாம். போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்துள்ள நபர்கள் வருமான வரிச்சட்டம் பிரிவு 80C இன் கீழ் 1.5 லட்சம் ரூபாயை ஒரு ஆண்டுக்கு டேக்ஸ் எக்ஸம்ப்ஷனாக கிளைம் செய்து கொள்ளலாம். எனினும் இதன் மூலமாக பெறப்படும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.


போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் (TD) அக்கவுண்ட்

இந்த அக்கவுண்டில் 1 முதல் 5 வருடங்கள் வரையிலான முதலீட்டு காலத்தை தேர்வு செய்து, 6.90% முதல் 7.50% வரையிலான வட்டியை டெபாசிட்டர்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்த அக்கவுண்டின் குறைந்தபட்ச முதலீடு தொகை 1000 ரூபாய். ஒரு வருடம் நிறைவு பெற்ற பிறகு முன்கூட்டியே பணத்தை வித்ட்ரா செய்ய நினைக்கும் நபர்களுக்கு 2 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு பணம் தரப்படுகிறது. இந்த அக்கவுண்டில் 5 வருடத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யக்கூடிய நபர்கள் வருமான வரி எக்ஸம்ப்ஷனை பெற்றுக் கொள்ளலாம்.

போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (MIS) அக்கவுண்ட்

இந்த அக்கவுண்ட்டை ஆரம்பிப்பதற்கு குறைந்தபட்ச தொகை 1000 ரூபாய் இருந்தால் போதுமானது. அதே சமயத்தில் இந்த அக்கவுண்டிற்கான அதிகபட்ச தொகை சிங்கிள் அக்கவுண்டிற்கு 9 லட்சம் ரூபாயாகவும், ஜாயிண்ட் அக்கவுண்டிற்கு 15 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.40 சதவீத வட்டி என்ற கணக்கில் மாதா மாதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலமாக பெறப்படும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டும்.

அக்கவுண்ட் திறந்த நாளிலிருந்து 5 வருடங்கள் நிறைவடைத்த பிறகு அக்கவுண்ட்டை மூடிக்கொள்ளலாம். ஒரு வருடம் மற்றும் 3 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அக்கவுண்டை மூடும் பொழுது முதலீட்டு தொகையிலிருந்து 2 சதவீதம் கழிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 3 மற்றும் 5 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அக்கவுண்ட்டை மூடினால் ஒரு சதவீதம் முதலீட்டு தொகை கழிக்கப்பட்டு மீதமுள்ள பணம் தரப்படும்.


சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் (SCSS)

பிரத்யேகமாக இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், 55 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஓய்வு பெற்ற நபர்களுக்கானது. இதில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை ஒருவர் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 8.20% வட்டி ஒரு ஆண்டுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் மூலமாக பெறப்பட்ட வட்டி 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் டேக்ஸ் எக்ஸம்ப்ஷன் கிளைம் செய்து கொள்ளலாம்.

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) அக்கவுண்ட்

அரசு ஆதரவு பெற்றுள்ள இந்த PPF அக்கவுண்டை 500 ரூபாய் இருந்தால் திறந்து விடலாம். இதில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் ஒருவர் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 7.10 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ததன் மூலமாக பெறப்பட்ட வட்டி ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் டேக்ஸ் டிடக்க்ஷனை கிளைம் செய்து கொள்ளலாம்.


செல்வமகள் சேமிப்பு திட்டம்

வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு முதலீடு செய்ய நினைக்கும் பெற்றோர்களுக்கு இந்த சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் ஏற்றது. 10 வயதிற்கும் குறைவாக உள்ள பெண் பிள்ளையின் பெயரில் இந்த அக்கவுண்டை திறக்கலாம். இதில் குறைந்தப்பட்ச முதலீடு 250 ரூபாயாகவும், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயையும் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்திற்கு 8 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. செல்வமகள் திட்டம் 15 வருடங்களுக்கு பிறகு மெச்சூரிட்டி ஆகும். பெண் பிள்ளை 18 வயதை அடைந்து விட்டால் 50 சதவீத பணத்தை வித்டிரா செய்து கொள்ளலாம்.

நேஷனல் சேவிங்ஸ் சர்டிஃபிகேட் (NSC)

இந்த ஐந்து வருட சேமிப்பு திட்டத்தில் 7.70 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச தொகை 1000 ரூபாயாகவும், அதிகபட்ச தொகை நிர்ணயிக்கப்படாமலும் உள்ளது. இந்த திட்டம் மூலமாக பெறப்படும் வட்டிக்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.


கிசான் விகாஸ் பத்திரம் (KVP)

KVP என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சேமிப்பு திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000 ரூபாய். இந்த திட்டம் 10 வருடங்கள் 4 மாதங்களில் மெச்சூரிட்டி ஆகிறது. இதற்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் செய்யும் முதலீடு வருமான வரி டேக்ஸ் டிடக்ஷனுக்கு தகுதி பெறாது. 115 மாதங்களுக்கு பிறகு இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகும் என்பதை இந்த சேமிப்பு திட்டத்தின் சிறப்பு.