Shreyas Iyer: `எனக்குத் தமிழ் புரியும். ஆனா...'

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.


இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருக்கிறது. பேட்டிங்கில் கொல்கத்தா அணி சார்பில் வெங்கடேஷ் ஐயரும் ஸ்ரேயாஸ் ஐயரும் அரைசதங்களை அடித்திருந்தனர். இருவரும் கூட்டணியாகவும் சிறப்பாக ஆடியிருந்தனர். இருவரும் இணைந்து 97 ரன்களுக்கு கூட்டணி அமைத்திருந்தனர்.

கொல்கத்தா அணி விரைவாக 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்ட இவர்களே காரணமாக இருந்தனர். இந்நிலையில் போட்டிக்கு பிறகு அணியின் வெற்றி குறித்து பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “எங்கள் அணியின் செயல் திறனில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில் பொறுப்பு மிகவும் முக்கியமானது. ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக் கொண்டு விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.


தொடர்ந்து பயணம் செய்யும் பொழுது புத்துணர்ச்சியாக இருப்பது மிகவும் முக்கியம். மேலும் நிகழ்காலத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நாள். அதை மிகச் சிறப்பாக செய்திருக்கிறோம். இன்று ஒவ்வொரு பந்துவீச்சாளரும் செயல்பட்ட விதம் மற்றும் அவர்கள் விக்கெட் வீழ்த்திய விதம் சிறப்பு. பந்துவீச்சில் நீங்கள் பல வெரைட்டிகளை வைத்திருப்பது நல்லது.


குர்பாஸ் நல்ல தொடக்கத்தைக் கொடுத்திருந்தார். நானும் வெங்கடேஷ் ஐயரும் அந்த ரன் விகிதத்தைத் தொடர்ந்து அப்படியே எடுத்துச் செல்ல வேண்டும் என்று விளையாடினோம். எனக்கு தமிழ் தெரியாது ஆனால் நன்றாக புரியும். வெங்கடேஷ் ஐயர் என்னிடம் தமிழில்தான் பேசுவார். அவருக்கு நான் ஹிந்தியில் பதிலளிப்பேன். இறுதிப் போட்டியில் நாங்கள் எங்களுடைய ஜோனில் இருக்க வேண்டும். முடிந்தளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.கொல்கத்தா அணி நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கத்து.