ஆரஞ்சு அலர்ட்டால் சுற்றுலாத் தலங்களில் நிலவும் தடை...

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகப் பருவங்களில் மழை பொய்த்து போவதும், எதிர்பாராத காலங்களில் அதிகளவு மழை பெய்து வெள்ளம் ஏற்படுவதும், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தும் வருகிறது.


இந்நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலம் துவங்கும் முன்பிருந்தே வரலாறு காணாத வகையில் வெயிலின் தாக்கம் நிலவியது. அக்னி நட்சத்திரம் துவங்கியதிலிருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரி என்ற அளவைத் தாண்டி வெயிலின் தாக்கம் நிலவியது.

மாஞ்சோலை, மணிமுத்தாறு, குற்றாலம் என பல இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும், நீலகிரி மாவட்டத்திலும் பராமரிப்புப் பணி காரணமாக தொட்டபெட்டா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நீலகிரியில் கோடை விழா நடந்து வரும் நிலையில் ஆரஞ்சு அலர்ட் காரணமாகக் கடந்த 3 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் மலர் கண்காட்சியையும் பார்வையிட முடியாத நிலை நிலவியது.

இப்படிப் பல சுற்றுலா தலங்களிலும் ஆரஞ்சு அலர்ட் காரணமாக போடப்பட்ட தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நீலகிரியில் நடைபெற்று வரும் தாவரவியல் பூங்கா மலர் கண்காட்சி, ரோஸ் கார்டனில் நடைபெற்று வரும் ரோஜா கண்காட்சி நேற்றுடன் முடிவடைய வேண்டிய நிலையில் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நீலகிரி வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.