திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு..
வைகாசி விசாகத் திருவிழாவிற்காக திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக வரும் 22ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், “முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 22ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே வருகிற 22ஆம் தேதி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அன்று காலை 6:40 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06857) காலை 8:15 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.
அடுத்ததாக திருநெல்வேலியில் இருந்து வண்டி எண் 06859 காலை 11:25 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1:00 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் வண்டி எண் 06858 என்ற சிறப்பு ரயிலானது காலை 9:15 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு காலை 10:50 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.
மறுமார்க்கமாக மற்றொரு சிறப்பு ரயில் வண்டி எண் 06860 திருச்செந்தூரிலிருந்து மதியம் 1:30 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 3:00 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகத் திருவிழாவிற்காக திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்காகச் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.