காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்குமா? பரபர சூழலில் கூடுகிறது ஆணையம்
தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரி பிரச்னையானது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரவே காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட்டன. ஆனால், அதன்பிறகும் காவிரி தண்ணீரை திறந்துவிட கர்நாடகம் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாததால் மேட்டூர் அணைக்கு சரிவர தண்ணீர் வரவில்லை. ஆனாலும், குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30 அடிகளாக சரிந்தது. இதனால் குறுவை பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு முடப்பட்டது.
அதே சமயம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா தற்போது வரை முரண்டு பிடித்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நாளை கூடுகிறது. இதில் இரு மாநில அணைகளின் நீர் இருப்பு, மழைப் பொழிவு, தண்ணீர் தேவை ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 21ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநில அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பு இடம்பெறலாம் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் காவிரி டெல்டா விவசாயிகள்.