மகளிர் உரிமைத் தொகை - ஜூன் இல்ல ஜூலை மாதம் வரும் குட் நியூஸ்! காரணம் இது தான்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மே மாதத்துக்கான உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்படும் நிலையில் அடுத்த மாதம் உரிமைத் தொகை வருவதற்குள் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் அவர்களது சுயமரியாதையை காக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு பெண்கள் வேறுயாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனாளர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 2 கோடியே 24 லட்சம் ரேஷன் அட்டைகள் உள்ள நிலையில் அவர்களில் பாதி பேருக்கு கூட உரிமைத் தொகை கிடைக்காத நிலையில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த மக்கள் பிரதிநிதிகளை மக்கள் மடக்கி கேள்வி எழுப்பினர். அப்போது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.