அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர பொது கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கிய அப்டேட்

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 10 ஆம் தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு, கடந்த மே 6 ஆம் தேதி முதல் 20 -ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வரும் 24 ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, மே 28 முதல் 30 ஆம் தேதி வரை சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கான முதல்கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு முடிந்த பிறகு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், ஜூலை 3 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.