10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை... ரயில்வேயில் 4,660 காலியிடங்கள்... இன்றே கடைசி நாள் !

நீங்கள் உங்கள் டிகிரியை முடித்து 20 வயதை பூர்த்தி செய்து விட்டீர்களா அல்லது பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வி தகுதியுடன் 18 வயதை பூர்த்தி செய்து விட்டீர்களா. அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்கு தான். இந்திய ரயில்வே வாரியம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழுவதும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.


பணியிடங்கள்:

இந்திய ரயில்வேயில் வேலை பெற நல்ல வாய்ப்பை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் துணை காவல் ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்) மற்றும் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 14-ம் தேதி வெளியானது.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையின் பணியிடங்களில் ஒருவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தவறுதலாக இரண்டு முறை விண்ணப்பம் செய்திருந்தால் அதில் ஒன்றிற்கான ஹால் டிக்கெட் தேதியில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தளமான rpf.indianrailways.gov.in -க்கு செல்ல வேண்டும். அதில் தேவையான இடங்களை பூர்த்தி செய்து ஒருமுறை முழுவதுமாக சரிபார்த்த பின்னர் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

 மாதம் 15-ம் தேதி தொடங்கிய விண்ணப்பமானது இன்றுடன் முடிவடைகிறது. இதில் ஒன்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆன்லைனில் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

மொத்த பணியிடங்கள்:

மொத்தம் உள்ள 4660 பணியிடங்களில் 4208 பணியிடங்கள் கான்ஸ்டபிள் பதவிக்கும், மீதமுள்ள 452 பணியிடங்கள் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கும் நிரப்பபடவுள்ளன.

கல்வி தகுதி:

சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பது அவசியம். 10வது அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கான்ஸ்டபிள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு 20 முதல் 28 வயது வரையிலும், கான்ஸ்டபிள் பதவிக்கு 18 முதல் 28 வயது வரையிலும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

இந்த பணியிடங்களுக்கான தேர்வு பல கட்டங்களாக  நடைபெறும். ஆன்லைன் கணினி அடிப்படையிலான தேர்வு , உடல் திறன் சோதனை, உடல் அளவீட்டு சோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு என மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெறும்.

முன்னாள் படைவீரர்கள் உடல் திறன் சோதனையில் கலந்து கொள்ள வேண்டியதில்லை. ஆனால் உடல் அளவீட்டு சோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு கட்டணம்:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் என்ன?

சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் தேர்வு செய்யப்பட்டால், மாதம் ரூ.35,400 சம்பளம் கிடைக்கும். கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் மாத சம்பளம் ரூ.21,700 எனக் கிடைக்கும்.