ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறப் போவது யார்? டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பதால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என அமைய உள்ளது.


டெல்லியில் இந்த போட்டி நடைபெற இருப்பதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 64 ஆவது லீக் ஆட்டமாக லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் கொல்கத்தா அணி 19 புள்ளிகள் உடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், சென்னை மூன்றாம் இடத்திலும், ஐதராபாத் நான்காம் இடத்திலும் உள்ளன. இன்று மோத உள்ள டெல்லி மற்றும் லக்னோ அணிகள் முறையே 6 மற்றும் 7-ஆம் இடத்தை பிடித்துள்ளன. இந்த போட்டியில் டெல்லி வெற்றி பெற்றால் 14 புள்ளிகள் உடன் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.

அதே நேரம் தோல்வி அடைந்தால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிடும். லக்னோ அணியை பொருத்தவரை இன்னும் மீதம் 2 போட்டிகள் உள்ளன அவை அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஓரளவு உறுதி செய்ய முடியும். இன்றைய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ தோல்வியடைந்தால் நெட் ரேட் குறைவாக இருப்பதன் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை லக்னோ அணி இழந்து விடும்.

இதனால் இரு அணிகளுக்கும் இன்றைய போட்டி வாழ்வா சாவா என அமைய உள்ளது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றால் அது சென்னை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல சாதகமாக அமையும். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்து வரும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக அமையும் என்பது கவனிக்கத்தக்கது.