இஷாந்த் சர்மாவை பழிதீர்த்த விராட் கோலி.. மைதானத்தில் சுவாரஸ்ய சம்பவம்
நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைப்பதற்காக, பெங்களூரு, டெல்லி அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. தொடர்ச்சியாக 4 போட்டிகளை வென்ற உற்சாகத்தோடு களமிறங்கிய பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்சி உடன் களமிறங்கிய விராட் கோலி, அதிரடியாக விளையாடத் தொடங்கினார்.

அப்போது, டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் இஷாந்த் சர்மா வீசிய பந்துகளை விராட் கோலி சிதறடித்தார். இஷாந்த் சர்மா வீசிய 2 பந்துகளையும் பவுண்டரிக்கு விராட் விரட்டியடித்தார். அப்போது ஓடி வந்த விராட் கோலி, இஷாந்த் சர்மாவை கேலி செய்தார். பின்னர், 3வது பந்தில் சிக்ஸர் அடித்து இஷாந்த் சர்மாவை மேலும் கடுப்பாக்கினார்.
ஆனால், அதே ஓவரில் 4ஆவது பந்தில், விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விராட் கோலி அவுட்டானார். அப்போது, கோலியை நெருங்கிவந்து, லேசான இடித்து, இஷாந்த் சர்மா கேலி செய்தார். அதை விராட் கோலியும் ஜாலியாக எடுத்துக் கொண்டு நடையை கட்டினார். இதை பார்த்த ரசிகர்கள் பெருங்கூச்சலிட்டு, தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பெங்களூரு அணி பேட்டிங் முடிந்து, டெல்லி கேப்பிடல்ஸ் விளையாட தொடங்கியதும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. இதனால், டெல்லி அணி தோல்வியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சூழலில், இஷாந்த் சர்மா கடைசி ஆளாக களமிறங்கினார். அவரை கேலி செய்தவாறே கைதட்டி வரவேற்ற விராட் கோலி, தொடர்ந்து சிரித்தும், விளையாடியும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.
கோலியும் இஷாந்த் சர்மாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இருவரும் மாறி மாறி கேலி செய்துகொண்ட சம்பவம் அங்கிருந்த ரசிகர்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தை கொடுத்தது.