திருச்சி மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழை காரணமாக புளியஞ்சோலை நீரோடையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அமைந்துள்ள சுற்றுலாத்தலம் தான் புளியஞ்சோலை. இது கொல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நீரோடையாகும். இந்த நீரோடைக்கு கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியிலிருந்து தான் நீர் வருகிறது.
வெயில் காலத்திலும் இங்கு நீர் இருக்கும், எனவே இது வற்றாத நீரோட எனவும் சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் நீர் வரத்து குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கிய நிலையில் கொல்லிமலையில் பெய்த மழையால் புளியஞ்சோலை நீரோடையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சில்லென்ற காற்றும் குளிர்ந்த நீரும் நம்மை வெகுவாக ஈர்க்கிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி இங்குள்ள விலங்குகளும் குதூகலத்துடன் இருக்கின்றன.