10ம் வகுப்பில் தோல்வியா..? கவலை வேண்டாம்... மறுதேர்வு எப்போது தெரியுமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மறு தேர்வெழுத நாளை (11.05.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் சேது வர்மா அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியிடப்பட்டன. ஒட்டுமொத்தமாக 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வெழுதி இருந்த நிலையில், 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 91.55 % ஆகும்.

இந்நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அரசு தேர்வுகள் இயக்குநர் சேது வர்மா, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மறு தேர்வெழுத நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார். பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை 2 ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்றும் கூறினார். மறு கூட்டலுக்கு வரும் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 5.95% பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 97.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்துள்ளன. குறைந்த பட்சமாக வேலூர் மாவட்டத்தில் 82.07% மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.