திருநெல்வேலியில் பசுமை குடை பிடிக்கும் சிக்னல்கள்... வாகன ஓட்டிகள் வரவேற்பு...

திருநெல்வேலியில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது. குறிப்பாகக் காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது.


இந்த கடும் வெயிலால் வெளியில் வந்து நடமாடவே மக்கள் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பவர்கள் வெயிலில் நிற்க முடியாமல் அவதிடைகின்றனர்.

இந்த வரலாறு காணாத வெயில் காரணமாக சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்காகப் பசுமை பந்தல் அமைக்கும் பணிகளை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே புதுச்சேரி, மதுரை ஆகிய இடங்களில் இத்தகைய பந்தல்கள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதைதொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளம் சிக்னலில் விவசாயத்திலும், மாடித் தோட்டங்களிலும் பசுமைக் குடில் அமைக்கப்படும் பசுமை வலைகள் கொண்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக கொக்கிரகுளம் பகுதியில் இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பசுமை பந்தல் பயனுள்ளதாக இருப்பதாகவும் பல இடங்களில் இது போன்ற அமைத்தால் வாகன ஓட்டிகளுக்குச் சிரமம் இல்லாமல் இருக்கும் எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.