மீண்டும் மாணவர்களைச் சந்திக்கும் நடிகர் விஜய்!!!

கடந்த ஆண்டைப் போலவே இம்முறையும் நடிகர் விஜய் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த ஆறாம் தேதி வெளியான நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில், 91 சதவிகிதத்திற்கு அதிமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சித்து, வெற்றி பெற வாழ்த்துகள் கூறியுள்ள விஜய், விரைவில் நாம் சந்திப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த ஆண்டைப் போல இந்த முறையும் நடிகர் விஜய் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை ஊக்கத்தொகை வழங்கியபோது அரசியல் கட்சியை விஜய் தொடங்கவில்லை. மேலும், 234 தொகுதிகள் வாரியாகத் தேர்ந்தெடுத்து கடந்த முறை ஊக்கத் தொகை வழங்கியது அவரது அரசியல் வருகையை கிட்டத்தட்ட உறுதி செய்வதாகவும் அமைந்திருந்தது.